விளையாட்டு

5-வது டெஸ்ட்: கிறிஸ் வோக்ஸ் விலகல்! | Ind v Eng

காயம் காரணமாக, பேட்டராகவும் கிறிஸ் வோக்ஸ் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா நான்கு மாற்றங்களுடன் களமிறங்கின. இங்கிலாந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஆலி போப், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் மழையால் பெருமளவு பாதித்தது. மொத்தம் 64 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. அரை சதம் அடித்த கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

முதல் நாள் ஆட்டத்தில் 14 ஓவர்கள் பந்துவீசி 46 ரன்கள் கொடுத்த வோக்ஸ், கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தினார். இன்னிங்ஸின் 57-வது ஓவரின்போது, கருண் நாயர் அடித்து நேராகச் சென்ற பந்தைத் தடுக்க மிட் ஆஃபிலிருந்த கிறிஸ் வோக்ஸ் முயற்சித்தார். பவுண்டரி எல்லை வரை பந்தை விரட்டிச் சென்ற அவர், பவுண்டரி எல்லையைத் தொடாத வகையில் பந்தை உள்பக்கமாகத் தடுத்துவிட்டார். இதில் நிலைதடுமாறிய அவர் பவுண்டரி எல்லைக்கு அந்தப் பக்கம் விழுந்தார். இதில் அவருடைய தோள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஃபிசியோவின் முதலுதவிக்குப் பிறகே, வோக்ஸ் களத்தைவிட்டு வெளியேறினார். வியாழக்கிழமை இரவு அவர் ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஓவல் டெஸ்டில் வோக்ஸ் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால், ஒரு பந்துவீச்சாளர் குறைவாகவே மீதமுள்ள நான்கு நாள்கள் விளையாடப்போகிறது இங்கிலாந்து. பேட்டிங்கிலும் ஓரளவுக்குப் பங்களிப்பைச் செலுத்துவார் என்பதால் இங்கிலாந்துக்கு வோக்ஸ் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் 5 டெஸ்டுகளிலும் பங்கேற்ற ஒரே வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ்.

Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Oval Test | 5th Test | India Tour of England | India England Test Series | Chris Woakes | Team England | England Cricket | Woakes Injury