சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, வாழ்வா, சாவா ஆட்டத்தில் புதன்கிழமை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
இந்த ஆட்டத்துக்காக இங்கிலாந்து அணி திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பிரைடன் கார்ஸ் பயிற்சியில் ஈடுபடவில்லை. கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இவர் பங்கெடுக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போதே பிரைடன் கார்ஸுக்கு இந்தப் பிரச்னை இருந்தது. இதன் காரணமாக, அந்தத் தொடரில் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் பிரைடன் கார்ஸ் விளையாடவில்லை.
இருந்தபோதிலும், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வைக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் அவர் அசௌகரியத்தையும் உணர்ந்தார்.
இந்நிலையில், அவர் மேற்கொண்டு சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்காக போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் ரெஹான் அஹமது சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஒரேயொரு பிரதான சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித் மட்டுமே இருந்த நிலையில், கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ரெஹான் அஹமது சேர்க்கப்பட்டுள்ளார்.