இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
பிர்மிங்ஹம் டெஸ்டில் தோற்றதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதலிரு டெஸ்டுகளில் இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் இல்லாததால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதைக் கருதி மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்துவீச்சில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங் மற்றும் கிறிஸ் வோக்ஸ் முதலிரு டெஸ்டுகளில் முறையே மொத்தம் 122 மற்றும் 118 ஓவர்கள் வீசியுள்ளார்கள்.
சாம் குக், ஜேமி ஓவர்டன் முதலிரு டெஸ்டுகளில் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்டுக்கு முன் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரும் இன்னும் விளையாடவில்லை. 2-வது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், 3-வது டெஸ்டில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரின்போது கஸ் அட்கின்சன் காயமடைந்தார். இதிலிருந்து குணமடைந்த நிலையில், அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடரில் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தாத சுழற்பந்துவீச்சாளர் சோயிப் பஷீர் 3-வது டெஸ்டில் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
லார்ட்ஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராலே, பென் டக்கெட், ஆலி போப், ஜேக்கப் பெத்தெல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங், சாம் குக், ஷோயிப் பஷீர்.