கோப்புப்படம் ANI
விளையாட்டு

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து லெவன் அறிவிப்பு!

ஆர்ச்சர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க லார்ட்ஸ் டெஸ்ட் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்தியா 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 371 ரன்கள் எனும் வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்கமில் ஜூலை 2 அன்று தொடங்குகிறது.

இதற்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார். ஆர்ச்சர் சேர்க்கப்பட்டது தவிர முதல் டெஸ்டிலிருந்து வேறு எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து செய்யவில்லை.

எனினும்,முதல் டெஸ்டில் விளையாடிய அதே வீரர்களைக் கொண்டே 2-வது டெஸ்டிலும் இங்கிலாந்து விளையாடவுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சரின் மறுவருகை இந்த டெஸ்டில் நடைபெறவில்லை.

சொந்தக் காரணங்களுக்காக திங்கள் அன்று எவ்விதப் பயிற்சியிலும் ஆர்ச்சர் ஈடுபடவில்லை. தனது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ஆர்ச்சர் இன்று தான் இங்கிலாந்து அணியினருடன் இணைகிறார். இதன் காரணமாக 2-வது டெஸ்டில் ஆர்ச்சர் சேர்க்கப்படவில்லை எனத் தெரிகிறது.

2021-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்க லார்ட்ஸ் டெஸ்ட் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.