விளையாட்டு

உறவை முறித்துக்கொள்ளும் பிசிசிஐ, ட்ரீம்11: பிசிசிஐ செயலர் சைகியா | Dream11 | BCCI

"வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்பதை..."

கிழக்கு நியூஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளம்பர ஸ்பான்சர் நிறுவனமான ட்ரீம்11, பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆன்லைன் கேமிங் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை ட்ரீம்11 எடுத்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி விளம்பர ஸ்பான்சராக இருந்த பைஜூஸின் ஒப்பந்தம் 2023 மார்ச்சில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனத்துடன் 2023-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது பிசிசிஐ. இந்த ஒப்பந்தமானது மூன்றாண்டு காலத்துக்குக் கையெழுத்தானது.

இதனிடையே தான் இணையவழி சூதாட்டங்களை முற்றிலுமாகத் தடை செய்யும் நோக்கில், ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 19-ல் ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 20 அன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை இதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், மசோதாவானது சட்டமாகியுள்ளது. பணம் சார்ந்த இணையவழி விளையாட்டுகள் அனைத்துக்கும் இது தடை விதிக்கிறது. பணம் சார்ந்த இணையவழி விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களுக்கும் இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.

இந்நிலையில் தான், பிசிசிஐ உடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள ட்ரீம்11 முடிவு செய்துள்ளது. பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா இதனை உறுதிபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "ஆன்லைன் கேமிங் மசோதாவைத் தொடர்ந்து பிசிசிஐ மற்றும் ட்ரீம்11 தங்களுடைய உறவை பரஸ்பரம் முறித்துக்கொள்கின்றன. வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்பதை பிசிசிஐ உறுதிபடுத்தும்" என்றார் பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா.

ட்ரீம்11 ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 358 கோடி. ஐபிஎல் போட்டிக்கு மை11சர்க்கிளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 முதல் 2028 வரையிலான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 625 கோடி.

ஆசியக் கோப்பைப் போட்டி செப்டம்பர் 9 அன்று தொடங்கவுள்ள நிலையில், புதிய விளம்பர ஸ்பான்சர் நிறுவனத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

BCCI | Dream11 | Online Gaming Bill | BCCI Secretary | BCCI Secretary Devajit Saikia | BCCI Sponsor