டிராவிட் ANI
விளையாட்டு

என்னை பயிற்சியாளராக தொடர சொன்ன ரோஹித்துக்கு நன்றி: டிராவிட்

“இந்த தருணத்தை அனுபவிக்க பல தியாகங்களைச் செய்துள்ளீர்கள்”.

யோகேஷ் குமார்

நம்பமுடியாத நினைவுகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்கு நன்றி என ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவி காலமும் முடிவடைந்தது.

இந்நிலையில் வீரர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பேசியுள்ளார் ராகுல் டிராவிட். இது குறித்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டிராவிட் பேசியதாவது:

“நம்பமுடியாத நினைவுகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் இந்த தருணங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்பீர்கள்.

நீங்கள் அடிக்கும் ரன்கள் அல்லது நீங்கள் எடுக்கும் விக்கெட்டுகள் என அனைத்தையும் மறக்கலாம், ஆனால் கோப்பையை வென்ற இதுபோன்ற தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும்.

அனைவரும் விளையாடிய விதம், களத்தில் போராடிய விதம், ஒரு குழுவாக நாம் அனைவரும் பணியாற்றிய விதம் ஆகியவற்றை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பல ஆண்டுகளாக நாம் கோப்பை அருகே நெருங்கி வந்து தோல்வி அடைந்துள்ளோம்.

இந்த தருணத்தை அனுபவிக்க பல தியாகங்களைச் செய்துள்ளீர்கள். ஒட்டுமொத்த நாடும் நம்மை நினைத்து பெருமைப்படும். நவம்பரில் என்னை பயிற்சியாளராக தொடர சொன்ன ரோஹித்துக்கு நன்றி. கேப்டன், பயிற்சியாளர் என நாம் இருவரும் சேர்ந்து நிறைய பேசியிருக்கோம். ஒரு அணியாக நாம் சிறப்பாகச் செயல்பட்டோம்” என்றார்.