உலகக் கோப்பையுடன் விடைபெற்றார் டிராவிட்! ANI
விளையாட்டு

உலகக் கோப்பையுடன் விடைபெற்றார் டிராவிட்!

யோகேஷ் குமார்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவி காலம் உலகக் கோப்பை வெற்றியுடன் முடிவடைந்தது.

டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

2021 டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார் ராகுல் டிராவிட். இவரது தலைமையில் இந்திய அணி 2023 ஆசிய கோப்பையை வென்றது.

2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் பிறகு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்தது.

இவரது பதவிக்காலத்தில் இந்திய அணி 9 டெஸ்ட் தொடர்களில் விளையாடி அதில் 6-ல் வெற்றி பெற்றது. 2 தொடர்களில் தோல்வியும், ஒரு தொடர் டிராவும் ஆனது.

14 ஒருநாள் தொடர்களில் 10-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் அடைந்துள்ளது.

17 டி20 தொடர்களில் 14-ல் வெற்றியும், ஒரு தொடரில் தோல்வியும், இரு தொடர்கள் டிராவும் ஆனது.

2021 நவம்பர் மாதத்தில் பதவியேற்ற டிராவிடின் பதவிக்காலம் 2023 நவம்பர் மாதத்தில் ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவரது பதவி ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் விளம்பரத்தை பிசிசிஐ வெளியிட்டது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் தெரிவித்தார்.

எனவே டி20 உலகக் கோப்பையே அவரது தலைமையில் இந்திய அணி விளையாடும் கடைசி போட்டியாக இருந்தது. அதில் வெற்றி பெற்று கோப்பையுடன் மிகச்சிறந்த வகையில் டிராவிடை அனுப்பி வைத்தது இந்திய அணி.