டிராவிட் ANI
விளையாட்டு

எனக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமா?: ஆர்வமில்லாத டிராவிட்!

இந்த உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன். ஏனென்றால் வெல்வதற்காகவே அது இருக்கிறது.

யோகேஷ் குமார்

யாருக்காகவோ சாதிக்க வேண்டும் என்பதற்கு எதிரானவன் நான் என ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிச் சுற்று நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மற்றவர்களுக்காகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.

#DoItForDravid குறித்து ஹாட் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன். ஏனென்றால் வெல்வதற்காகவே அது இருக்கிறது. யாருக்காகவோ அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. என்னை பொறுத்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். யாருக்காகவோ சாதிக்க வேண்டும் என்பதற்கு எதிரானவன் நான். எனவே அது குறித்து பேசவோ விவாதிக்கவோ எனக்கு விருப்பமில்லை” என்றார்.