தினேஷ் கார்த்திக் @icc
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: தொலைக்காட்சி வர்ணனையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக்

யோகேஷ் குமார்

ஐபிஎல் போட்டியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், டி20 உலகக் கோப்பைக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் தினேஷ் கார்த்திக். இவரின் பேட்டிங்கிற்கு ரசிகர்கள் இருப்பது போல இவரின் பேச்சுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக். இதைத் தொடர்ந்து இனி இவரின் ஆட்டத்தை பார்க்க முடியாது என கவலைப்படும் ரசிகர்களுக்கு இவரின் பேச்சு ஆறுதலாக இருக்கும்.

டி20 உலகக் கோப்பைக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் குழுவில் ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்ளே, நாசர் ஹுசைன், இயன் பிஷப், இயன் ஸ்மித் போன்ற பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து, “டி20 உலகக் கோப்பை பல வழிகளில் வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். 20 அணிகள், 55 ஆட்டங்கள் மற்றும் சில புதிய மைதானங்களுடன், இது மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கும். இதில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன். உயர்தர வர்ணனைக் குழுவில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் நான் சமீபத்தில் விளையாடிய வீரர்களைப் பற்றி பேசுவேன் என்பது இன்னும் உற்சாகமாக உள்ளது” என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.