ஜோகோவிச் 
விளையாட்டு

பிபிசி நேர்காணல்: பாதியில் எழுந்து சென்ற ஜோகோவிச்!

யோகேஷ் குமார்

விம்பிள்டன் தொடர்பான பிபிசி நேர்காணலின் போது, பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 98 வினாடிகள் மட்டுமே பதிலளித்த நிலையில் பாதியில் எழுந்து சென்றுள்ளார்.

2024 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நெ. 2 வீரரும், 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவருமான ஜோகோவிச், உலகின் 15-ம் நிலை வீரரான ரூனாவை எதிர்கொண்டார்.

இதில், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் ஆட்டம் முடிந்தப்பின் பேசிய ஜோகோவிச், ரசிகர்களின் செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிபிசி நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோகோவிச், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.

அவரிடம் தொடர்ந்து ரசிகர்களின் செயல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஜோகோவிச் நேர்காணலின் பாதியிலேயே எழுந்து சென்றார்.

நேர்காணலில், ரசிகர்களின் செயல் குறித்து என்ன நினைக்கிறீர்கள், 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற உங்களுக்கு அதற்கேற்ற மரியாதை கிடைத்ததா என்ற கேள்விகள் ஜோகோவிச்சிடம் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், “நிறைய ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்தேன். டிக்கெட்டுகளைப் பெற்றுகொண்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று வருகின்றனர். அவர்களின் ஆதரவின்றி இத்தனை ஆண்டுகள் விளையாடிருக்க முடியாது. எனவே, அதனை நான் வரவேற்கிறேன். ஆனால் அன்று நான் பேசியது குறித்து வருத்தப்படவில்லை, ஏனென்றால் ரசிகர்கள் தங்களின் எல்லையைத் தாண்டும் போது, அதற்கேற்ப நான் பதிலளிப்பேன்” என்றார்.

இதன் பிறகு மீண்டும் அவரிடம் ரசிகர்களின் செயல் குறித்த கேள்வியை மீண்டும் எழுப்ப, “இதைத் தவிர வேறேதேனும் கேள்விகள் உள்ளதா? இதில் மட்டுமே உங்களது கவனம் உள்ளதா? இது 3-வது கேள்வி” எனக் கூறி 98 வினாடிகள் மட்டுமே பதிலளித்த நிலையில் எழுந்து சென்றார் ஜோகோவிச்.