தினேஷ் கார்த்திக் ANI
விளையாட்டு

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர், ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்

யோகேஷ் குமார்

ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 முதல் 17 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். 257 ஆட்டங்களில் விளையாடி 22 அரை சதங்கள் உட்பட 4842 ரன்கள் குவித்துள்ளார். 161 சிக்ஸர்களை விளாசிய இவர், விக்கெட் கீப்பிங்கில் 37 முறை ஸ்டம்பிங்கும், ஒட்டுமொத்தமாக 145 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் தில்லி, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக விளையாடி உள்ளார். ஆர்சிபி அணிக்காக 60 ஆட்டங்களில் விளையாடி 937 ரன்கள் அடித்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியுடன் அவர் ஓய்வு பெற்றார். இதன் பிறகு ஜூன் 1 அன்று அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக செயல்பட்டார்.