ANI
விளையாட்டு

டியவால்ட் பிரேவிஸுக்கு கூடுதல் பணமா?: முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே! | Dewald Brevis

"சிஎஸ்கே நிர்வாகத்தின் செயல்கள் அனைத்தும் முழுமையாக ஐபிஎல் போட்டியின் விதி மற்றும் ஒழுங்குமுறைக்கு இணங்க எடுக்கப்பட்டவை."

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் டியவால்ட் பிரேவிஸ் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டதில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று விளக்கமளித்துள்ளது.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் குர்ஜப்னீத் சிங் ரூ. 2.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். போட்டிக்கு நடுவே இவருக்குக் காயம் ஏற்பட, மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டியவால்ட் பிரேவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய வருகை சிஎஸ்கே பேட்டிங்கை வலுப்படுத்தியது.

இதனிடையே, சிஎஸ்கே வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் காணொளி ஒன்றை வெளியிட்டார். பிரேவிஸ் குறித்து அஸ்வின் கூறுகையில், டியவால்ட் பிரேவிஸிடம் ஓரிரு அணிகள் பேசி வந்ததாகக் கூட கேள்விப்பட்டேன். தற்போது நான் வந்து விளையாடினால் அடுத்தாண்டு என்னுடைய விலை உயரும். எனவே, எனக்குக் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என்பது பிரேவிஸின் விருப்பமாக இருந்தது. சிஎஸ்கே இதைக் கொடுக்கத் தயாராக இருந்ததால் சிஎஸ்கே அணிக்கு வந்தார்" என்று அஸ்வின் கூறினார். பிரேவிஸ் தொடர்பான அவருடைய பேசியது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது.

எனவே, இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தள்ளப்பட்டது.

சிஎஸ்கே தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் 2025 வீரர்கள் ஏலத்தின்போது, குர்ஜப்நீத் சிங் ரூ. 2.2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் காயமடைந்ததால், ஏப்ரல் 2025-ல் மாற்று வீரராக டியவால்ட் பிரேவிஸ் ரூ. 2.2 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

டியவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஏப்ரல் 18-ல் ஐபிஎல் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் விதிகளின்படி மாற்று வீரராக ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட ஐபிஎல் பருவத்தில் காயமடைந்த அல்லது விளையாட முடியாமல் போன வீரர் எந்தத் தொகைக்குத் தேர்வு செய்யப்பட்டாரோ, அதைவிடக் கூடுதல் தொகைக்கு மாற்று வீரர் தேர்வு செய்யப்படக் கூடாது. மேலும், ஐபிஎல் போட்டிக்கு மத்தியில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படும்போது, சம்பந்தப்பட்ட பருவத்தில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு அணி நிர்வாகம் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தத் தொகை குறைத்து வழங்கப்படும். இது தவிர வீரர் ஒப்பந்தத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கழிவுகள் பிடித்தம் செய்யப்படும்.

Dewald Brevis | Ashwin | Ashwin Youtube | IPL | IPL 2025 | Replacement Player | IPL Replacement Player | Gurjapneet Singh | IPL Auction | IPL Mega Auction | CSK | Chennai Super Kings | CSK Franchise |