தங்களது உறவை முறித்துக் கொண்ட ஒரே வாரத்தில் கேத்ரினா சினியாகொவா - தாமஸ் மகாக் இணை ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் செக் குடியரசை சேர்ந்த கேத்ரினா சினியாகொவா - தாமஸ் மகாக் இணை 6-2, 5-7, 10-8 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றது.
தங்களது உறவை முறித்துக் கொண்ட ஒரே வாரத்தில் இந்த சாதனையைப் படைத்தது கேத்ரினா சினியாகொவா - தாமஸ் மகாக் இணை.
கேத்ரினாவும் தாமஸும் கடந்த 2021 முதல் காதலித்து வந்ததாகக் கூறப்படுறது. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு ஒரு வாரம் இருந்த நிலையில், “தங்களின் உறவு டென்னிஸில் மட்டும் தொடரும். ஒலிம்பிக்ஸில் நாங்கள் பங்கேற்போம்” என்று கேத்ரினா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த இணை ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றது. ஆட்டம் முடிந்தப்பிறகு இருவரும் தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதன் பிறகு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், “எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம். அது ரகசியமாகவே இருக்கட்டும்” என்று பதிலளித்தனர்.