டிம் டேவிட் (கோப்புப்படம்) ANI
விளையாட்டு

'வைட்' சர்ச்சை: பொல்லார்ட், டிம் டேவிட்டுக்கு அபராதம்!

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக மும்பை இந்தியன்ஸ் பேட்டர் டிம் டேவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 33-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சண்டிகரில் கடந்த 18-ம் தேதி மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கின்போது அர்ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரின் கடைசிப் பந்து 'வைட் லைன்' வெளியே சென்றது. நடுவர் இதற்கு 'வைட்' கொடுக்கவில்லை. களத்திலிருந்த சூர்யகுமார் யாதவும் ரெவ்யூ எடுக்கவில்லை.

அப்போது டக் அவுட்டிலிருந்த (Dug Out) மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் 'வைட்' என்று காண்பித்தார். இவரைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட் மற்றும் பேட்டர் டிம் டேவிட் ரெவ்யூ எடுக்கும்படி அங்கிருந்து கூறியிருக்கிறார்கள்.

ஐபிஎல் விதிப்படி டிம் டேவிட் மற்றும் பொல்லார்ட் செய்த செயல் குற்றமாகும். இதற்காக இவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தவறை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.