Akhtar Soomro
விளையாட்டு

அரையிறுதிக்கான பயணத் திட்டமிடல்: டேவிட் மில்லர் விமர்சனம்

இறுதிச் சுற்றில் தன்னுடைய ஆதரவு நியூசிலாந்துக்கு தான் என்பதையும் டேவிட் மில்லர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

கிழக்கு நியூஸ்

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் தன்னுடைய ஆதரவு நியூசிலாந்துக்கு தான் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்காக சதமடித்த டேவிட் மில்லர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்குப் பிறகு துபாய் வந்து, உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்பியது பற்றி விமர்சனத்தை முன்வைத்தார்.

"இது வெறும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் விமானப் பயணம் தான். ஆனால், நாங்கள் அதைச் செய்தாக வேண்டும். ஆட்டம் முடிந்தவுடன் அதிகாலையில் புறப்பட்டோம். துபாய்க்கு மாலை 4 மணிக்குச் சென்றடைந்தோம். பிறகு காலை 7.30 மணிக்கு மீண்டும் திரும்பி வந்தோம். இது சரியானது அல்ல. 5 மணி நேரம் விமானப் பயணம், மீதமுள்ள நேரம் ஓய்வெடுத்து மீண்டு வருவதற்கான சமயம் என்பதல்ல இது. இது உகந்த சூழல் அல்ல" என்றார்.

மேலும், இறுதிச் சுற்றில் தன்னுடைய ஆதரவு நியூசிலாந்துக்கு தான் என்பதையும் டேவிட் மில்லர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள் உள்பட.

பி பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா. ஏ பிரிவிலிருந்து அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றாலும் முதலிரு இடங்கள் யாருக்கும் என்பது உறுதியாகாமல் இருந்தது.

காரணம், இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளைப் பெற்றிருந்ததால், இரு அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதலிடத்தையும் தோல்வியடையும் அணி ஏ பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. இது உறுதியானால் தான் பி பிரிவிலிருந்து எந்த அணி துபாயில் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பது தெரியவரும்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி லீக் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, முதல் அரையிறுதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டுக்கும் நடுவில் ஒரு நாள் இடைவெளி என்பதால், இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல் பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகளையும் முன்கூட்டியே துபாய் வரவழைத்தது ஐசிசி.

காரணம், துபாய் சூழலுக்கு வீரர்கள் ஒத்துவர நேரம் எடுக்கும் என்பதால், இரு அணிகளுக்கும் சம வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த முடிவை ஐசிசி எடுத்ததாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, ஆஸ்திரேலியா முன்கூட்டியே துபாய் வந்தடைந்தது. தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்த கையோடு பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்தது. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மோதுவது உறுதியான பிறகு, துபாயிலிருந்து புறப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பியது தென்னாப்பிரிக்கா. இது மிகப் பெரிய அளவில் பேசுபொருளானது.