தெற்கு கரீபியனில் உள்ள குரசாவ் (Curaçao) என்ற குட்டி நாடு 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம், கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற மிகவும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமையை குரசாவ் பெற்றுள்ளது.
2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை அடுத்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் இந்த உலகக் கோப்பையில் கலந்துகொள்கின்றன. உலகக் கோப்பைக்கு அணிகள் தகுதி பெற பல்வேறு தகுதிச் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. பிராந்தியங்கள் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் வெற்றி பெறும் அணிகள் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.
வட அமெரிக்க கூட்டமைப்பு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து சங்கம் என்பது கான்ககாஃப் என்று அழைக்கப்படும். கால்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இதுவொரு பிராந்தியம்.
இந்தப் பிராந்தியத்தில் குரசாவ் மற்றும் ஜமைக்கா அணிகள் நவம்பர் 18 அன்று மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.
தகுதிச் சுற்றில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத குரசாவ் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த அணியின் மேலாளர் டிக் அட்வோகட். தனிப்பட்ட காரணங்களுக்காக ஜமைக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இவர் வீரர்களுடன் இருக்கவில்லை. எனினும், குரசாவ் வீரர்கள் தோல்வியைச் சந்திக்காமல் ஆட்டத்தை டிரா செய்துள்ளார்கள்.
பி பிரிவில் இடம்பெற்றுள்ள குரசாவ் மொத்தம் 6 ஆட்டங்களில் விளையாடிய 3 ஆட்டங்களில் வென்று 3 ஆட்டங்கள் தோல்வியடைந்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்று பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
2018-ல் கால்பந்து உலகக் கோப்பைக்கு ஐஸ்லாந்து தகுதி பெற்றது. அந்நாட்டில் அப்போதைய மக்கள்தொகை 3.50 லட்சத்துக்கு மேல் மட்டுமே இருந்தது. இதன்மூலம், மிகச் சிறிய நாடாக கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அணி என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றது.
இந்தச் சாதனையை தான் குரசாவ் நாடு தற்போது முறியடித்துள்ளது. குரசாவ் நாட்டின் மக்கள்தொகை 1.56 லட்சம் மட்டுமே. அந்நாட்டின் நிலப்பரப்பு 444 சதுர கிலோமீட்டர். இதன்மூலம், கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையை குரசாவ் தற்போது தன்வசப்படுத்தியுள்ளது.
இந்தப் பிராந்தியத்திலிருந்து மற்ற இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்த பனாமா மற்றும் ஹைதி ஆகிய நாடுகளும் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதுவரை மொத்தம் 42 அணிகள் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.
FIFA World Cup | Football World Cup | FIFA | World Cup Qualifiers | Curaçao |