ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தமிழக வீரர்களைத் தேர்வு செய்துள்ளது.
சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாமல் இருப்பது பற்றி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். அந்தளவுக்கு விவாதத்துக்குரிய இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட சிஎஸ்கே நிர்வாகம், தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 4 தமிழக வீரர்களைத் தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தின் சாதனை கிரிக்கெட் வீரரான அஸ்வினைத் தேர்வு செய்ய ஏலத்தில் ராஜஸ்தானுடன் கடுமையாகப் போட்டியிட்டது சிஎஸ்கே. இறுதியில் அவரை ரூ. 9.75 கோடிக்குத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய அஸ்வின் மீண்டும் தனது தாய்வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பஞ்சாபில் பிறந்து ஹரியாணாவில் வளர்ந்த குர்ஜப்நீத் சிங், 17 வயது முதல் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். தமிழக ரஞ்சி அணியில் விளையாடி வரும் குர்ஜப்நீத் சிங்கை ரூ. 2.20 கோடிக்குத் தேர்வு செய்தது. ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கும் இளம் வீரரும் ரஞ்சி அணியில் விளையாடி வருபவருமான ஆண்ட்ரே சித்தார்த்தை ரூ. 30 லட்சத்துக்கும் சிஎஸ்கே அணி தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
இந்த நான்கு பேரில் அஸ்வின், விஜய் சங்கர் ஆகிய இருவரும் நிச்சயம் சிஎஸ்கெ லெவனில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. தமிழர்களுக்கு வாய்ப்பளிதில்லை என்று இனிமேல் யாரும் சிஎஸ்கேவை கை நீட்டி குறை சொல்ல முடியாது.