ANI
விளையாட்டு

தோனி கடைசியாகக் களமிறங்குவது ஏன்?: ஃபிளெமிங் விளக்கம்

கிழக்கு நியூஸ்

எம்எஸ் தோனி முழங்கால் காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால் அவர் கடைசியில் களமிறங்கி வருவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் நடப்பு பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடைசி ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அணியின் ஸ்கோரிலும் இவரது அதிரடி சிக்ஸர்கள் பெரிதளவிலான தாக்கத்தை உண்டாக்குகின்றன.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், தோனி கடைசி ஓவரில் களமிறங்கி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். இவர் 4 பந்துகளில் 20 ரன்கள் விளாசியதுதான் இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கிடையிலான வித்தியாசம்.

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் மற்ற பேட்டர்கள் அதிரடிக்கு சிரமப்பட, இவர் 18-வது ஓவரில் களமிறங்கி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், இரு சிக்ஸர்கள் உள்பட 28 ரன்கள் விளாசினார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் இதுவரை 5 முறை பேட் செய்துள்ள தோனி, ஒருமுறைகூட ஆட்டமிழக்கவில்லை.

  • தில்லிக்கு எதிராக 37* (16)

  • ஹைதராபாதுக்கு எதிராக 1* (2)

  • கொல்கத்தாவுக்கு எதிராக 1* (3)

  • மும்பைக்கு எதிராக 20* (4)

  • லக்னௌவுக்கு எதிராக 28* (9)

சிறப்பாக பேட் செய்து வருவதால் இவரை முன்கூட்டியே களமிறக்குவது குறித்து ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃபிளெமிங் விளக்கம் தந்துள்ளார்.

"வலைப்பயிற்சியில்கூட தோனியின் பேட்டிங் மிகக் கச்சிதமாக உள்ளது. எனவே, இவருடைய ஆட்டம் அணியில் யாருக்கும் ஆச்சர்யமாக இல்லை.

இவருக்கு முழங்கால் பிரச்னை உள்ளது. அதிலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. எனவே, குறைந்த அளவிலான பந்துகளையே இவரால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். அவரை நீண்ட நேரம் களத்தில் காண அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள். எங்களுக்கும் ஆசைதான். ஆனால், அவர் தற்போது பேட் செய்து வருவதுதான் சரியான அளவு. இந்தப் பருவம் முழுக்க எங்களுக்கு தோனி தேவை.

2 அல்லது 3 ஓவர்களில் அதிரடி காட்டுவதுதான் அவருக்கானப் பணி. அணியிலுள்ள மற்ற பேட்டர்கள்தான், அவர் கடைசியில் வந்து அதிரடி காட்டுவதற்கான உகந்த சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

தற்போதைய சூழலில், விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. அவர் பேட் செய்ய வரும்போதும், ரசிகர்களை மகிழ்விக்கும்போதும் என்ன மாதிரியான ஒரு சூழல் உருவாகிறது. அவர் சாதித்ததை எண்ணியும், அவருக்குக் கிடைக்கும் அன்பை எண்ணியும் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர் எங்களுடைய அணியில் இருப்பதும், அணியின் இதயத் துடிப்பாக அவர் இருப்பதும் எங்களுக்குப் பெருமை" என்றார் ஃபிளெமிங்.