எம்.எஸ். தோனி (கோப்புப்படம்) 
விளையாட்டு

காயம் காரணமாக முதல் 2 வாரங்களுக்கு தோனி விளையாடுவது சிரமம்: சிஎஸ்கே | MS Dhoni | CSK |

தோனி தற்போது கால் தசைப்பிடிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்...

கிழக்கு நியூஸ்

கால் தசைபிடிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் 2026-ன் முதல் இரண்டு வார ஆட்டங்களில் தோனி விளையாடுவது சிரமம் என சிஎஸ்கே அணி இன்று அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2026 இன்று முதல் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மார்ச் 30-ல் தனது முதல் ஆட்டத்தை குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

சிஎஸ்கே என்றால் தோனி

சிஎஸ்கே என்றாலே அதன் நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ். தோனிதான். 44 வயதான தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 278 ஆட்டங்களில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 248 ஆட்டங்களில் 4,865 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

2025 ஐபிஎல்லில் தோனி

ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து, தோனி பிரத்யேகமாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த வருடம், 14 ஆட்டங்களில் விளையாடி 196 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக போட்டியின் பாதியில் விலகியதால், சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் தோனி செயல்பட்டார். எனினும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே சிஎஸ்கே அணியால் பிடிக்க முடிந்தது.

தோனிக்குக் காயம்

இந்நிலையில், தோனிக்கு கால் தசைப்பிடிப்பால் இரு வாரங்களுக்கு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 போட்டியின் முதல் இரண்டு வாரங்களில் தோனி விளையாடுவது சிரமம் என சிஎஸ்கே அணி இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் செயல்படவுள்ளார். எனினும் சிஎஸ்கே நிர்வாகத்தின் அறிவிப்பினால் இந்த வருடத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளன.

Chennai Super Kings team has released official statement stating that MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain and likely to miss the first two weeks of TATA IPL 2026.