கர்நாடக சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கே கௌதம் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கே கௌதம் கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வீரர். பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டர். அதே சமயம் ஆஃப் ஸ்பின்னரும் கூட.
ஐபிஎல் 2021 ஏலத்தில் இவருடைய அடிப்படை விலை ரூ. 20 லட்சம். ஆனால், ரூ. 9.25 கோடிக்கு எடுத்தது சிஎஸ்கே. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். ஐபிஎல் 2020-ல் மிக மோசமாக விளையாடிய சிஎஸ்கே ஐபிஎல் 2021-ல் கோப்பையை வென்று சாதித்தது. ஆனால், ரூ. 9.25 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டபோதிலும் இந்தப் போட்டியில் ஒரு ஆட்டத்தில்கூட விளையாடும் லெவனில் கௌதம் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் இவருக்குத் தனி இடமுண்டு.
37 வயதான இவர் கர்நாடகத்துக்காக மொத்தம் 394 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2,783 ரன்கள் எடுத்துள்ளார். கர்நாடக அணி 2018-19-ல் சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். 2021-ல் இலங்கைப் பயணத்தின்போது வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக அணியுடன் பயணித்தார் கௌதம். வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட, ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்காக ஒரேயொரு ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியிருக்கிறார் கௌதம்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 36 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 247 ரன்களையும் எடுத்துள்ளார்.
CSK | Chennai Super Kings | K Gowtham | Karnataka Player | IPL |