சிபிஎல் டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் கயானா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஃபாஃப் டு பிளெஸ்ஸி தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி.
சிபிஎல் டி20 போட்டி கடந்த ஆகஸ்ட் 30 அன்று தொடங்கியது. லீக் சுற்றின் முடிவில் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் தகுதிச் சுற்றிலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச் சுற்று நேற்று கயானாவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரிடோரியஸ் 25 ரன்களும், ஷாய் ஹோப் 22 ரன்களும் எடுத்தனர். செயின்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அஹமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியில் அசத்திய ஆரோன் ஜோன்ஸ் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்தார். அவருடன் கூட்டணி அமைத்த ரோஸ்டன் சேஸ் 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல்முறையாக சிபிஎல் டி20 கோப்பையை வென்றது செயின்ட் லூசியா கிங்ஸ் அணி.
ரோஸ்டன் சேஸ் ஆட்ட நாயகனாகவும், இப்போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அஹமது தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் மூலம் பிரீத்தி ஜிந்தாவின் 17 வருடக் காத்திருப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. 2008 முதல் பஞ்சாப் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக உள்ள பிரீத்தி ஜிந்தா, செயின்ட் லூசியா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரும் கூட.
எனவே, இதுவரை எந்தவொரு டி20 கோப்பையையும் பிரீத்தி ஜிந்தா வெல்லாத நிலையில், முதல்முறையாக அவருடைய அணி ஒன்று டி20 கோப்பையை வென்றுள்ளது.