கோபா அமெரிக்கா இறுதிச் சுற்று: கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா  @copaamerica_ENG
விளையாட்டு

கோபா அமெரிக்கா இறுதிச் சுற்றில் அர்ஜெண்டினா வெற்றி!

16-வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜெண்டினா.

யோகேஷ் குமார்

கோபா அமெரிக்கா இறுதிச் சுற்றில் கொலம்பியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா அணி.

கோபா அமெரிக்கா கோப்பை ஜூன் 20 அன்று தொடங்கியது. அரையிறுதியில் கனடாவை அர்ஜெண்டினாவும், உருகுவே அணியை கொலம்பியாவும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகளுக்கு இடையேயான இறுதிச் சுற்று நடைபெற்றது. டிக்கெட் இல்லாமல் ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைய முயற்சி செய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2-வது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தும் ஒரு கோல் கூட வரவில்லை. ஆட்டத்தின் நடுவில் காயம் ஏற்பட்டதால் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மாற்று வீரராக வெளியேறினார்.

அவர் வெளியேறியே பிறகு அழுகக்கூடிய காணொளி இணையத்தில் வேகமாக பரவியது.

90 நிமிடம் ஆகியும் கோல வராத காரணத்தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 112-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்டினஸ் அற்புதமான கோலை அடிக்க அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து கொலம்பியா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதன் மூலம் அர்ஜெண்டினா 1-0 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்று 16-வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. உருகுவே அணி 15 முறை சாம்பியன் பட்டம் வென்று இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.