பாண்டியா @mipaltan
விளையாட்டு

பாண்டியாவைக் குறி வைக்கவேண்டாம்: பொல்லார்ட் வேண்டுகோள்

யோகேஷ் குமார்

தனிப்பட்ட வீரரை குறிவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனி களமிறங்கினார்.

ஹார்திக் பாண்டியா வீசிய இந்த ஓவரில், தான் விளையாடிய முதல் மூன்று பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரளவைத்தார் தோனி. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து பலரும் மும்பை அணியின் கேப்டன் பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர். முன்னதாக மும்பை அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்ற செய்தி வெளியானதில் இருந்தே, மும்பை ரசிகர்கள் பலரும் இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

மேலும், பாண்டியா விளையாட வரும் போது அவருக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிடுவது போன்ற சம்பவங்களும் நடந்தது.

இந்நிலையில் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட், “பாண்டியாவைக் குறி வைக்கவேண்டாம்” என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“இதனால் அவரின் தன்னம்பிக்கை குறையுமா? என்பது எனக்கு தெரியாது. பாண்டியா தன்னம்பிக்கை கொண்டவர். கிரிக்கெட்டை பொறுத்தவரை நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். இதுபோன்ற நாட்களை கிரிக்கெட்டில் நீங்கள் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வீரரை குறிவைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் விளையாட்டு.

தனது திறமைகளைத் தொடரவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் கடுமையாக உழைக்கும் ஒரு வீரராக பாண்டியாவை நான் பார்க்கிறேன். இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர் அவர். அவரால் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்தையும் செய்யமுடியும்.

அவர் மீண்டும் சிறந்து விளையாடி உச்சத்துக்கு வரும் போது, அனைவரும் அவரைப் புகழ்ந்து பேசுவதை நான் உட்கார்ந்து பார்ப்பேன் என நம்புகிறேன். சக வீரர்கள் அவருடன் நல்ல உறவில் உள்ளனர்” என்றார்.