ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே மொத்தம் 7 வீரர்களைத் தவறவிட்டது. 
விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: இந்த 7 வீரர்களையா சிஎஸ்கே கோட்டை விட்டது? | MS Dhoni | IPL Auction 2026 | CSK |

பொதுவாக அதிக தொகைக்கு வீரர்களை எடுப்பது சிஎஸ்கேவின் வழக்கத்திலேயே கிடையாது. இதுவரை மொத்தமே வெறும் 4 முறை தான் ரூ. 10 கோடி அல்லது...

கிழக்கு நியூஸ்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இளஞ்சிங்கங்களுக்காக சிஎஸ்கே அணி கோடிகளைக் கொட்டிக் குவித்தாலும், தாங்கள் குறிவைத்த சில வீரர்களை கடைசி வரை சென்று தவறவிட்டது உண்மையிலேயே வேதனையான விஷயம் தான்.

ரூ. 43.4 கோடியுடன் 9 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் ஏலத்தில் களமிறங்கியது சிஎஸ்கே. இம்முறை, சிஎஸ்கேவின் யுக்தியில் பெரிய மாற்றம் தெரிந்தது. பொதுவாக அதிக தொகைக்கு வீரர்களை எடுப்பது சிஎஸ்கேவின் வழக்கத்திலேயே கிடையாது. இதுவரை மொத்தமே வெறும் 4 முறை தான் ரூ. 10 கோடி அல்லது அதற்கும் அதிகமாகச் செலவழித்து ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே.

ஆனால், இம்முறை இரு இளம் வீரர்களுக்காக தலா ரூ. 14.2 கோடியைக் கொட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதற்கு முன்பு 2023-ல் பென் ஸ்டோக்ஸுக்காக ரூ. 16.25 கோடியையும் 2022-ல் தீபக் சஹாருக்காகவும் 2024-ல் டேரில் மிட்செல்லுக்காகவும் தலா ரூ. 14 கோடியையும் செலவழித்தது தான் சிஎஸ்கேவின் காஸ்ட்லி வரலாறு.

இந்த வருடம் எல்லாமே தலைகீழ் மாற்றம். ஏலத்தில் சிஎஸ்கே அணி நூலிழையில் தவறவிட்ட 4 வீரர்களின் பட்டியலை முதலில் பார்க்கலாம்.

கேமரூன் கிரீன்

ஏலத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனின் விலையைத்தான்.

கடைசி ஓவர்களில் தோனியுடன் இணைந்து அதிரடியாக விளையாட ஒரு வீரர் தேவை என்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு கேமரூன் கிரீனுக்காக ரூ. 25 கோடி வரை சென்றது சிஎஸ்கே. ரூ. 25.2 கோடிக்கு கேகேஆர் செல்ல, சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது. இறுதியாக, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்ற சாதனையுடன் கேகேஆர் வசம் சென்றார் கேமரூன் கிரீன்.

ஆனால், கிரீனைப் பொறுத்தவரை சிஎஸ்கே அவரைத் தவறவிட்டதா அல்லது விலையை ஏற்றிவிட்டதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஜேசன் ஹோல்டர்

மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர். இந்த ஆண்டில் டி20யில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஹோல்டருக்கே முதலிடம். இவருக்கான ஏலத்தை சிஎஸ்கே தான் தொடக்கி வைத்தது.

இவரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே மற்றும் குஜராத் இடையே கடுமையான போட்டி நிலவியது. சிஎஸ்கே ரூ. 6 கோடியைத் தாண்டியும்கூட குஜராத் விடவில்லை.

இறுதியில், குஜராத் அணியே ரூ. 7 கோடிக்கு கேட்க சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது. குஜராத் டைடன்ஸ் ரூ. 7 கோடிக்கு ஹோல்டரை தட்டிச் சென்றது. ஹோல்டருக்காக ரூ. 6.8 கோடி வரை போராடியது சிஎஸ்கே.

முஸ்தபிஸுர் ரஹ்மான்

வங்கதேச வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிஸுர் ரஹ்மான், முன்பு சிஎஸ்கேவுக்காக விளையாடியிருக்கிறார். எனவே, சிஎஸ்கேவும் இவரைத் தேர்வு செய்ய கோதாவில் இறங்கியது. ரூ. 9 கோடி வரை சிஎஸ்கே சென்று பார்த்தது. இறுதியில் ரூ. 9.2 கோடிக்கு முஸ்தபிஸுரை கேகேஆர் தேர்வு செய்தது.

ஜேக் எட்வர்ட்ஸ்

ஜேக் எட்வர்ட்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர். இவருடைய அடிப்படை விலை ரூ. 50 லட்சம்.

ஆல்-ரவுண்டர் என்பதால், சிஎஸ்கே இவரைக் குறிவைத்தது. ரூ. 2.8 கோடி வரை சென்றது. இறுதியில், சன்ரைசர்ஸ் அணி எட்வர்ட்ஸை ரூ. 3 கோடிக்குக் கொத்திச் சென்றது.

இவர்களெல்லாம் சிஎஸ்கே கடைசி வரை போராடி நூலிழையில் தவறவிட்ட வீரர்கள். இதுதவிர மேலும் சில வீரர்களுக்கும் சிஎஸ்கே வலை விரித்தது. ஆனால், மற்ற அணிகளின் கடும் போட்டியால் சிஎஸ்கே பாதியில் விலகியது.

ரவி பிஷ்னாய்

லக்னௌ அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரவி பிஷ்னாய் ரூ. 2 கோடியுடன் ஏலத்துக்கு வந்தார். ரூ. 5.8 கோடி வரை நல்ல முயற்சியை மேற்கொண்டது சிஎஸ்கே. இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை ரூ. 7.2 கோடிக்குத் தேர்வு செய்தது.

அசோக் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரர்களில் சிஎஸ்கே குறிவைத்ததில் அசோக் சர்மாவும் ஒருவர். காரணம், சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் குரூப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அசோக் சர்மா தான்.

அவருக்கு ரூ. 30 லட்சம் அடிப்படை விலை. 35 லட்சம் வரை மட்டுமே சென்றது சிஎஸ்கே. இறுதியில் அசோக் சர்மாவை குஜராத் அணி ரூ. 90 லட்சத்துக்குத் தேர்வு செய்தது.

பென் ட்வார்ஷிஸ்

அடிப்படை விலையாக ரூ. 1 கோடியுடன் ஏலத்தில் பங்கெடுத்தார் பென் ட்வார்ஷிஸ். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான இவரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே ஆர்வம் காட்டியது. ரூ. 3 கோடி வரை பஞ்சாபுடன் மல்லுக்கட்டியது சிஎஸ்கே. ரூ. 3 கோடியைத் தாண்டியவுடன் சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகியது. பிறகு, குஜராத்துடன் சண்டையிட்டு ரூ. 4.4 கோடிக்கு பஞ்சாப் இவரைத் தேர்வு செய்தது.

ரூ. 43.4 கோடியுடன் ஏலத்துக்குச் சென்ற சிஎஸ்கே ரூ. 41 கோடியைச் செலவழித்து தனக்கான இளஞ்சிங்கப் படையை உருவாக்கியுள்ளது.

காயம்பட்ட சிங்கத்தின் மூச்சு கர்ஜனையைவிடப் பெரிதாக இருக்கும் என்பார்கள். இந்த மினி ஏலம் சிஎஸ்கேவுக்கு அப்படியானதாகவே அமைந்திருக்கிறது.

Chennai Super Kings missed 7 key players in the IPL Auction held recently in Abu Dhabi.

IPL | IPL 2026 | IPL Auction | IPL Mini Auction | Chennai Super Kings | CSK | Kolkata Knight Riders | KKR | Sunrisers Hyderabad | SRH | Punjab Kings | PBKS | Cameron Green | Ashok Sharma |Ben Stokes | Deepak Chahar | Ravi Bishnoi | Jason Holder | Jack Edwards | Mustafizur Rahman | Unsuccessful bid | Unsuccessful bids| Ben Dwarshuis| MS Dhoni | Ruturaj Gaikwad |