உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனை எதிர்கொள்ளவிருக்கும் குகேஷ். 
விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக அரசு தனி விண்ணப்பம்!

கிழக்கு நியூஸ்

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்த தமிழக அரசு சார்பில் தனியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

குகேஷ் - நடப்பு சாம்பியன் டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை தில்லியில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) விண்ணப்பம் அளித்துள்ளது. இதேபோல, சென்னையில் நடத்த தமிழக அரசும் தனியாக விண்ணப்பம் செய்துள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைமைச் செயல் அலுவலர் எமில் சுடோவ்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024-ஐ நடத்த மூன்று விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரிசைப்படி சென்னை, சிங்கப்பூர், புதுதில்லி சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்த மூன்றுமே தகுதிவாய்ந்ததாக உள்ளன.

ஃபிடே கவுன்சில் அடுத்த வாரம் கூடி இதுகுறித்து விவாதிக்கவுள்ளது. விண்ணப்பித்துள்ளவர்கள் சார்பாக பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு கூடுதல் தகவல்களைக் கேட்டுப்பெறுவோம். ஜூனில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தில்லி சார்பாக அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது. சென்னை சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்துள்ளது. தில்லி மற்றும் சிங்கப்பூர் விண்ணப்பிப்பதற்கு முன்பே, உலக செஸ் சாம்பியன்ஷிப்பை சென்னையில் நடத்த தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்த எந்தவொரு அரசும் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தடையில்லை. எனினும், உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்த ஒரே நாட்டிலிருந்து இரு விண்ணப்பங்கள் வந்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு நவம்பர் - டிசம்பரில் நடைபெறுகிறது.