கோப்புப்படம் ANI
விளையாட்டு

2-வது டெஸ்டில் பும்ரா இல்லையா...?: கொதித்தெழுந்த ரவி சாஸ்திரி!

உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் உங்களிடம் உள்ளார். 7 நாள் ஓய்வுக்குப் பிறகும்...

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்படாததற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ரவி சாஸ்திரி.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்கமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் இல்லை என்பது முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ரா 5 டெஸ்டுகளில் 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடுவார் என்பது முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தெந்த டெஸ்டுகளில் அவர் விளையாடுவார் என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இரண்டாவது டெஸ்டிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். பும்ரா உள்பட இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கருண் நாயர் 3-வது இடத்தில் விளையாடுகிறார்.

முதல் டெஸ்டில் தோல்வியடைந்ததால், இரண்டாவது டெஸ்ட் இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில் பும்ரா விளையாடாததை ஏற்றுக்கொள்ள முடியாது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணித் தேர்வு குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது:

"விளையாடும் லெவனில் யார் இருக்க வேண்டும் என்பதை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் குழு தான் முடிவு செய்ய வேண்டும். முடிவெடுக்கும் உரிமை வீரர்களிடமிருந்து பறிக்கப்பட வேண்டும்.

டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை இது முக்கியமான டெஸ்ட். வேறு எந்த டெஸ்டை விடவும் இந்த டெஸ்டில் அவர் விளையாடியிருக்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்ட் பிறகு வரலாம். இங்கிலாந்துக்குப் பதிலடி தர வேண்டிய டெஸ்ட் என்பதால் இது முக்கியமான டெஸ்ட்.

இந்த டெஸ்டில் அவரை விளையாட வைத்து, 1-1 என தொடரை சமன் செய்த பிறகு, லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து ஓய்வு வேண்டுமெனில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்கிற வாய்ப்பை அவரிடம் வழங்கலாம்.

இந்தியா கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது இது மிகமிக முக்கியமான டெஸ்ட். நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்டுகளில் தோல்வி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்டுகளில் தோல்வி. இங்கிலாந்தில் முதல் டெஸ்டில் தோல்வி.

எனவே, வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய தேவை உள்ளது. உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் உங்களிடம் உள்ளார். 7 நாள் ஓய்வுக்குப் பிறகும் அவரை அணியில் சேர்க்காமல் உள்ளீர்கள். இதை நம்புவது கடினமாக உள்ளது. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ரவி சாஸ்திரி.