சிட்னி டெஸ்ட் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பாதியில் வெளியேறி மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா இல்லாததால் இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதியில் ஜஸ்பிரித் பும்ரா நன்றாகவே பந்துவீசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவரை மட்டுமே வீசிய பும்ரா, களத்திலிருந்து வெளியேறினார். அவர் வீசிய ஓவரிலும் பந்தின் வேகம் மணிக்கு 120, 130 வேகத்தில் தான் இருந்தது. உடனடியாகக் களத்திலிருந்து வெளியேறிய அவர், மருத்துவமனைக்குச் சென்றார். ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக பும்ரா மருத்துவமனைக்குச் சென்றார். பும்ரா இல்லாததால், இடைக்கால கேப்டனாக கோலி செயல்பட்டார்.
பும்ரா இல்லாத நிலையிலும் கடைசி 4 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தியது இந்தியா. ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் ரிஷப் பந்த் 29 பந்துகளில் அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா செய்தியாளர்களைச் சந்தித்தார். பும்ரா பற்றி அவர் கூறுகையில், "பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் மேற்கொள்வதற்காக அவர் சென்றுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவக் குழுவினர் திரும்பியவுடன் தான் முழு விவரம் தெரியவரும்" என்றார் அவர்.
கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்போகும் இலக்கு மற்றும் பும்ராவின் ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்தே சிட்னி டெஸ்டின் முடிவு அமையப்போகிறது.