கோப்புப்படம் ANI
விளையாட்டு

பும்ரா - ஆகாஷ் தீப் அசத்தல்: ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா

இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளதால், இந்த டெஸ்ட் பெரும்பாலும் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணியால் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் காபாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது.

பேட்டிங்கில் மீண்டும் தடுமாறிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. முதல் பந்தில் கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்டீவ் ஸ்மித் தவறவிட, இதைப் பயன்படுத்தி அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 85 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

ஆனால், ரோஹித் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ராகுலுடன் இணைந்த ஜடேஜா சிறப்பாக கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்தது.

84 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஸ்டீவ் ஸ்மித்தின் பாய்ச்சலான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ராகுல் விக்கெட்டுக்கு பிறகு ஜடேஜா பொறுப்பேற்றுக் கொண்டார். நிதிஷ் ரெட்டி சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். 16 ரன்கள் எடுத்த நிதிஷ் ரெட்டி கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அரை சதம் கடந்த ஜடேஜா தேநீர் இடைவேளையில் 65 ரன்கள் எடுத்திருந்தார். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு அப்போது 45 ரன்கள் தேவைப்பட்டது.

ஃபாலோ ஆனை தவிர்க்க ஜடேஜா உதவுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. சிராஜ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜாவுக்கு அழுத்தம் கூடியது. ஆஸ்திரேலியா ஷார்ட் பந்து உத்தியைப் பயன்படுத்தியது. இந்த வலையில் சிக்கிய ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு பும்ராவுடன் ஆகாஷ் தீப் இணைந்தார். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்தியாவுக்கு அப்போது 32 ரன்கள் தேவைப்பட்டன.

பும்ராவும் ஆகாஷ் தீப்பும் மிகவும் பொறுப்புடன் விளையாடி, மெதுவாக ரன்களை சேர்த்தார்கள்.

ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவாக அமைந்தது. இதன் காரணமாக, இரு முனையிலிருந்தும் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் பந்துவீச வேண்டிய சூழல் இருந்தது. ஷார்ட் பந்து உத்தியைப் பயன்படுத்தியும் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. கம்மின்ஸ் ஷார்ட் பந்தில் பும்ரா ஒரு சிக்ஸர் அடித்து அதகளப்படுத்தினார்.

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்குத் தேவையான ரன்களை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்த இந்தக் கூட்டணி, பெரிய ஷாட்டுக்கு முனைப்பு காட்டாமல் மிகுந்த கட்டுப்பாட்டுடன் விளையாடியது. கம்மின்ஸ் வீசிய 75-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆகாஷ் தீப் பவுண்டரி அடிக்க, இந்திய அணி ஒருவழியாக ஃபாலோ ஆனை தவிர்த்தது. ஓய்வறையில் கௌதம் கம்பீரும் விராட் கோலியும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தார்கள்.

ஃபாலோ ஆனை தவிர்த்ததால், உடனடியாக கம்மின்ஸ் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து, ஆஸ்திரேலியாவுக்கு உளவியல் சிக்கலைக் கொடுத்தார் ஆகாஷ் தீப். கம்மின்ஸ் இந்த ஓவரை நிறைவு செய்வதற்குள் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பிறகு, நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. பும்ரா 10 ரன்களுடனும் ஆகாஷ் தீப் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளதால், இந்த டெஸ்ட் பெரும்பாலும் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.