நியூயார்க் மைதானத்தை அகற்ற வந்த புல்டோசர்கள் ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: நியூயார்க் மைதானத்தை அகற்ற வந்த புல்டோசர்கள்

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட நியூயார்க் மைதானம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்படவுள்ளது.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பைக்காக கடந்த 5 மாதங்களில் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி என்கிற சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்கள் உட்பட மொத்தம் 8 ஆட்டங்கள் இங்கு நடைபெற்றது. இது முற்றிலும் டி20 உலகக் கோப்பைக்காக கட்டப்பட்ட தற்காலிக மைதானமாகும். இந்நிலையில் இங்கு நடைபெறவிருந்த அனைத்து ஆட்டங்களும் முடிந்த நிலையில் நியூயார்க் மைதானம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்படவுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மைதானத்தின் கூறுகள் அகற்றப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேல் அடுக்கு தரை மற்றும் உள்கட்டமைப்பு உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகள் மற்றும் ரசிகர்கள் அணுகும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. இவ்வாறு செய்வதால் அந்த பகுதியில் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்றும் இன்னும் பல திறமையானவர்களை கண்டறியமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு டிராப் இன் ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளங்கள் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், இங்கு நடைபெற்ற அனைத்து ஆட்டங்களும் சுவாரசியாமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இங்கு நடைபெற்ற 8 ஆட்டங்களில் கனடா அணியால் எடுக்கப்பட்ட 137 ரன்களே, இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.