விளையாட்டு

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ. 538 கோடி வழங்க பிசிசிஐக்கு உத்தரவு!

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிசிசிஐ-க்கு 6 வார காலம் அவகாசம் உள்ளது.

கிழக்கு நியூஸ்

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ. 538 கோடியை வழங்க பிசிசிஐ-க்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டதை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் அணி 2011-ல் சேர்க்கப்பட்டது. கொச்சி கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் (கேசிபிஎல்) நிறுவனத்தால் கொச்சி டஸ்கர்ஸ் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ரென்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் (ஆர்எஸ்டபிள்யு) தலைமையில் கன்சோர்டியமாக கொச்சி அணி பங்கேற்றது.

பல்வேறு தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு வங்கி உத்தரவாதத்தை அளிக்காமல் கேசிபிஎல் நிறுவனம் தாமதப்படுத்தியது. தாமதங்களுக்கு மத்தியிலும் கேசிபிஎல் நிறுவனத்துடன் தொடர்பிலிருந்த பிசிசிஐ, நிறுவனத்திடமிருந்து தொகைகளைப் பெற்று வந்தது. பிறகு, 2011 செப்டம்பரில் கொச்சி டஸ்கர்ஸ் அணி ஐபிஎல் போட்டியிலிருந்து பிசிசிஐயால் நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கேசிபிஎல் மற்றும் ஆர்எஸ்டபிள்யு சார்பில் 2012-ல் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. இந்தப் பிரச்னையில் தீர்ப்பாயம் 2015-ல் உத்தரவிட்டது. லாபத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக கேசிபிஎல் நிறுவனத்துக்கு ரூ. 384 கோடியும் வங்கி உத்தரவாதத்தைத் தவறாகப் பணமாக்கியதற்காக ஆர்எஸ்டபிள்யுவுக்கு வட்டி மற்றும் சட்டச் செலவுகள் உள்பட ரூ. 153 கோடியும் வழங்க வேண்டும் பிசிசிஐ-க்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாகக் கூறி தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இதில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிப்படுத்தி இன்று தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பிசிசிஐ-க்கு 6 வார காலம் அவகாசம் உள்ளது.