நடராஜனை பாராட்டிய புவனேஷ்வர் குமார் @SunRisers
விளையாட்டு

நடராஜனின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை: புவனேஸ்வர் குமார்

யோகேஷ் குமார்

யார்க்கர் பந்து வீசுவதில் நடராஜன் திறமையானவர் என புவனேஸ்வர் குமார் பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் நேற்று நடைபெற்ற தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 266 ரன்கள் விளாசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாகப் பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. ஐபிஎல்-லில் முதல் முறையாக ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நடராஜன்.

இந்நிலையில் ஆட்டத்திற்குப் பிறகு சன்ரைசர்ஸ் வீரர் புவனேஸ்வர் குமார் நடராஜனை பாராட்டி பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“அவர் சிறப்பாக பந்துவீசினார். பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்து, தனது வேலையையும் செய்து, கவனிக்கப்படாமல் போகும் வீரர் நடராஜன். யார்க்கர் பந்து வீசுவதில் அவர் எவ்வளவு திறமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும். கடினமாக உழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனை ஆண்டுளாக சன்ரைசர்ஸ் அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமான வீரராக உள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.

ஆட்டத்திற்குப் பிறகு நடராஜன் பேசியதாவது:

“மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்று திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விளையாடச் சென்றேன். இது வரவிருக்கும் ஆட்டங்களில் எனக்கு உதவும். எங்கள் அணியின் பேட்டிங்கை பார்க்க வீடியோ கேம் பார்ப்பது போல் உள்ளது. இதேபோல நாங்கள் சிறப்பாக விளையாடி அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.