பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் நேற்று (டிச.6) அடிலெய்டில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணி 180 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். ராகுலும் கில்லும் முறையே 37, 31 ரன்களில் வெளியேறினர். மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் பிறகு விளையாடிய ஆஸி. அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. மெக்ஸ்வீனி 38 ரன்களிலும், லபுஷேன் 20 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. மெக்ஸ்வீனியை 39 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித்தை 2 ரன்களிலும் ஆரம்பத்திலேயே வெளியேற்றினார் பும்ரா.
இதைத் தொடர்ந்து லபுஷேன் - டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான கூட்டணியால் ஆஸி. அணி முன்னிலை பெற்றது. 64 ரன்களில் லபுஷேன் நிதிஷ் ரெட்டி பந்தில் ஆட்டமிழக்க மறுமுனையில் சதம் அடித்து அசத்தினார் ஹெட்.
மிட்செல் மார்ஷ் 9 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 15 ரன்களிலும் வெளியேற, டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்த மிகவும் சிரமப்பட்டது இந்திய அணி.
கிட்டத்தட்ட 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய ஹெட், 4 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.