@icc
விளையாட்டு

2-வது டெஸ்ட்: வெற்றி பெறும் முனைப்பில் ஆஸி. அணி!

2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 29 ரன்கள் பின்தங்கியுள்ளது.

யோகேஷ் குமார்

பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

அடிலெய்டில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணி 180 ரன்களுக்குச் சுருண்டது.

அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். ராகுலும் கில்லும் முறையே 37, 31 ரன்களில் வெளியேறினர். மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பிறகு விளையாடிய ஆஸி. அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது.

இன்று நடைபெற்ற 2-வது நாளிலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தியது. குறிப்பாக, டிராவிஸ் ஹெட் 4 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து இந்திய அணியை திணறடித்தார். லபுஷேன் 64 ரன்கள் எடுத்தார்.

பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கே.எல். ராகுல் 7, ஜெயிஸ்வால் 24, விராட் கோலி 11, கில் 28, ரோஹித் சர்மா 6 ரன்களில் வெளியேற இந்திய அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸி. அணியில் போலாண்ட் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில், 2-வது டெஸ்டில் வலுவான நிலையில் உள்ளது ஆஸி. அணி.