இந்தியாவுக்கு எதிராக பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாகத் தோற்றது ஆஸ்திரேலிய அணி. இதனால் ஆஸி. ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஆஸி. அணி மீது அதிருப்தியில் உள்ளார்கள். இதனால் 2-வது டெஸ்டில் நிச்சயமாக மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அதே 13 வீரர்களிருந்துதான் ஆஸி. அணி தேர்வு செய்யப்படும் எனப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட் அறிவித்துள்ளார்.
பெர்த் டெஸ்டில் விளையாடிய 11 பேரைத் தவிர பேட்டர் ஜோஷ் இங்க்லீஷும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டும் அணியில் உள்ளார்கள்.
அதே ஆஸி. அணி தான் அடிலெய்ட் பகலிரவு டெஸ்டில் விளையாடும் என மெக்டோனால்ட் அறிவித்தாலும் அதே 11 பேர் தான் விளையாடுவார்கள் என்று அவர் உறுதியளிக்கவில்லை. இதனால் அடிலெய்ட் டெஸ்டில் ஜோஷ் இங்க்லீஷுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.