விளையாட்டு

காபா டெஸ்ட்: பும்ரா மீண்டும் அசத்தல்

விக்கெட் விழுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கினாலும் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பால் விக்கெட் வீழ்த்தி பும்ராவுக்கு உதவ முடியவில்லை.

கிழக்கு நியூஸ்

காபா டெஸ்ட் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனிலுள்ள காபாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரு மாற்றங்களுடன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அஸ்வின், ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே அறிவித்தபடி, ஜோஷ் ஹேசில்வுட் அணிக்கு மீண்டும் திரும்ப ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டார்.

முதல் நாளில் கிரிக்கெட்டை காட்டிலும் மழையின் தாக்கமே அதிகம் இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர்கள் கட்டுப்பாட்டுடன் விளையாடி விக்கெட்டை இழக்காமல் இருந்தார்கள்.

மழை குறுக்கீட்டால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.

இழந்த ஓவர்களைச் சரிகட்டுவதற்காக மீதமுள்ள நான்கு நாள்களும், ஆட்டம் அரைமணி நேரம் முன்பே தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டம் காலை தொடங்கியது. மழையின் குறுக்கீடு இல்லாமல் ஆட்டம் சீராக நடைபெற்றது. முதல் அரைமணி நேரத்தில் விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற அழுத்தம் இந்தியாவுக்கு இருந்தது.

வழக்கம்போல் அற்புதமாகப் பந்துவீசிய பும்ரா, இரு தொடக்க பேட்டர்களையும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தார். மார்னஸ் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் சற்று தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

பும்ரா தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. விக்கெட் விழுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும் வகையில் பந்துகளை வீசினாலும் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பால் விக்கெட் வீழ்த்தி பும்ராவுக்கு உதவ முடியவில்லை.

நிதிஷ் ரெட்டி அழைக்கப்பட்டார். இவர் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஃபுல் லெங்த் பந்தை கவரில் விளையாட முயன்று சாதாரண பந்தில் ஆட்டமிழந்தார் லபுஷேன்.

ஸ்டீவ் ஸ்மித் பழைய ஆட்டத்தைக் கையிலெடுத்ததைப்போல நிதானம் காட்டி வருகிறார். டிராவிஸ் ஹெட் 20 ரன்களை தொட்டுவிட்டார். உணவு இடைவேளை வரை இந்தியா மேற்கொண்டு விக்கெட் வீழ்த்தவில்லை.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி பேட்டுக்கும், பந்துக்கும் இடையிலான நல்ல போட்டியாக இருந்தது.