விளையாட்டு

பெர்த் டெஸ்ட்: இந்தியாவின் ஆதிக்கத்தில் அடங்கிய ஆஸி. அணி!

ஆஸி. அணி, 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்துள்ளது.

யோகேஷ் குமார்

பெர்த் டெஸ்டின் 3-வது நாளில் முழு ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது இந்திய அணி.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடர், கடந்த வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டாலும் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி, 2-வது நாள் முடிவில் 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜெயிஸ்வால் 90, ராகுல் 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-வது நாளான இன்றும் ஆஸி. பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் அபாரமாக எதிர்கொண்டார்கள். ஆஸ்திரேலியாவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஜெயிஸ்வால். ராகுல், 77 ரன்களில் ஆட்டமிழக்க படிக்கல்லும் ஜெயிஸ்வாலுக்கு நல்ல இணையாக இருந்தார். படிக்கல் 25 ரன்களில் வெளியேற, ஜெயிஸ்வால் 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் 1 ரன்னில் வெளியேறினார்கள்.

இதைத் தொடர்ந்து கோலியுடன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அசத்தலாக விளையாடிய கோலி, ஆஸ்திரேலியாவில் தனது 7-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். கோலியின் 30-வது டெஸ்ட் சதமாகவும் 81-வது சர்வதேச சதமாகவும் இது அமைந்தது.

இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ரெட்டி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஆஸி. அணி தரப்பில் நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

534 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி பும்ரா மற்றும் சிராஜை எதிர்கொள்ள முடியாமல் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணி வெற்றிக்கு இன்னும் 522 ரன்கள் தேவைப்படுகிறது.