விளையாட்டு

ஜூன் 4 துயரத்துக்குப் பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி! | Chinnaswamy Stadium |

ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள்.

கிழக்கு நியூஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்த பிறகு, சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஜூன் மாதம் ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

இதன்பிறகு, சின்னசாமி மைதானத்தில் எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் இதுவரை நடைபெறவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கமே வெற்றிப் பேரணியை நடத்துவதற்குக் காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த ஆணையம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெரியளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று அறிக்கை தாக்கல் செய்தது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் மாநில காவல் துறை இடையே பிரச்னை நிலவி வருகிறது. விதிமுறைகளைச் சரிவர பின்பற்றாததால், மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த தடையில்லாச் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தன.

இதன் காரணமாக, மகளிர் உலகக் கோப்பை ஆட்டங்களைத் தவறவிட்டது சின்னசாமி மைதானம். இந்த மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன. அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் நடைபெறவிருந்தது.

கர்நாடகத்தில் நடத்தப்படும் மஹாராஜா கோப்பைப் போட்டி இதே காரணத்துக்காக பெங்களூருவிலிருந்து இடம் மாற்றப்பட்டது. ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் போட்டியை நடத்த ஒப்புதல் கோரியும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் தான், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் திம்மப்பையா நினைவுக் கோப்பைப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மும்பை, விதர்பா, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் என 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. உள்நாட்டு கிரிக்கெட் பருவத்துக்கு முன்பு பல நாள் ஆட்டங்களாக இப்போட்டி நடைபெறுவது வழக்கம்.

இந்தப் போட்டியில் 6 ஆட்டங்கள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகின்றன. அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஹனுமா விஹாரி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள்.

இதன்மூலம், ஜூன் 4 துயரச் சம்பவத்துக்குப் பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு முதல்முறையாக கிரிக்கெட் திரும்புகிறது.

Chinnaswamy Stadium | Bengaluru | RCB | Royal Challengers Bengaluru | Stampede |