இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது, பென் ஸ்டோக்ஸுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இவருடையக் காயம் குறித்த சமீபத்திய தகவல் நேற்று வெளியானது. பென் ஸ்டோக்ஸ் ஜனவரியில் அறுவைச் சிகிச்சை செய்கிறார். இதன் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதன் காரணமாக, சாம்பியன்ஸ் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படவில்லை. ஜோ ரூட் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பிய நிலையில், காயம் காரணமாக மட்டுமே ஸ்டோக்ஸ் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு மே 22-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்டில் விளையாடுகிறது. அதற்கு முன் எந்தவொரு டெஸ்டும் இல்லை. இங்கிலாந்து டெஸ்ட் அணியில் எந்தவொரு தாக்கத்தையும் இது ஏற்படுத்தப்போவதில்லை.
ஆனால், ஜனவரி 9-ல் தொடங்கும் எஸ்ஏடி20யில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியிருந்தார். இதில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.