பென் ஸ்டோக்ஸ் விலகல் ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: பென் ஸ்டோக்ஸ் விலகல்

“உலகக் கோப்பையிலிருந்து விலகுவது ஒருவகையில் தியாகமாக தெரியலாம், ஆனால் இது எதிர்காலத்தை நோக்கி எடுக்கப்பட்ட முடிவு”

யோகேஷ் குமார்

எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை ஜுன் 1-ல் தொடங்கி ஜுன் 29-ல் முடிவடைகிறது. கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன.

2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இறுதிச் சுற்றில் பென் ஸ்டோக்ஸ் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இது அவரின் முதல் டி20 அரை சதம் ஆகும். இந்நிலையில் அவர் காயம் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் பேசியாதவது:

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் ஒரு ஆல்-ரவுண்டராக எனது முழுப் பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இதனால் எனது பந்துவீச்சில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கிறேன். ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பையிலிருந்து விலகுவது ஒருவகையில் தியாகமாக தெரியலாம், ஆனால் இது எதிர்காலத்தில் நான் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு, பந்துவீச்சில் நான் எந்தளவுக்கு பின்தங்கியிருந்தேன் என்பது சமீபத்தில் நடைபெற்ற இந்திய டெஸ்ட் தொடரில் தெரிந்திருக்கும்” என்றார்.