தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான குவஹாத்தி டெஸ்டில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்தாண்டு முழுமையாக இழந்தது. இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது இந்தியா.
இரு பெரிய தோல்விகளைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன.
கம்பீர் பயிற்சியின் கீழ் மொத்தம் 19 டெஸ்டுகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 7-ல் வெற்றி, 10-ல் தோல்வி, 2-ல் டிரா செய்துள்ளது இந்தியா. இந்திய அணியின் வெற்றி விகிதம் 36.82% ஆக உள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுடனான தோல்விக்குப் பிறகு கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். 95 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த நிலையிலிருந்து 122 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த நிலைக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட்ட ஷாட்டையும் காரணம் சொல்லக் கூடாது. எல்லாரிடமும் பொறுப்பு இருக்கிறது. நான் தனிப்பட்ட நபரை குறை சொல்ல மாட்டேன். வரும் நாள்களிலும் அதைச் செய்ய மாட்டேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட திறமையான வீரர்கள் தேவையில்லை. போதிய அளவிலான திறன்களைக் கொண்ட கடினமான குணாதிசயங்கள் அடங்கிய வீரர்கள் தான் தேவை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தீவிரமான ஆர்வம் இருந்தால், கூட்டு முயற்சி தேவை. வீரர்கள் அல்லது சில தனி நபர்களைக் குறை சொல்வது சரியாகாது" என்றார் அவர்.
மேலும், இப்பதவிக்குச் சரியான நபரா என்று இன்னும் நினைக்கிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்து கம்பீர் பேசியதாவது:
"என் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டும். தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு நான் எதிர்கொண்ட முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே இதைக் கூறியிருக்கிறேன். இந்திய கிரிக்கெட் தான் முக்கியம், நான் முக்கியமல்ல. தற்போதும் அதைத் தான் நான் கூறுகிறேன்.
இங்கிலாந்தில் இளம் அணியைக் கொண்டு நான் தான் முடிவுகளைப் பெற்றுத் தந்தேன் என்பதை மக்கள் தொடர்ந்து மறக்கட்டும். நீங்கள் விரைவில் அதை மறப்பீர்கள் எனத் தெரியும். காரணம், பலர் நியூசிலாந்து குறித்து பேசுகிறீர்கள். சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை என் பயிற்சியின் கீழ் தான் இந்தியா வென்றது. ஆம், இது குறைவான அனுபவங்களைக் கொண்ட அணி. இவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நிலைமையை முற்றிலுமாக மாற்றுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள்" என்றார் கம்பீர்.
BCCI will decide my future, says Team India's Head Coach Gautam Gambhir
IND v SA | India v South Africa | Simon Harmer | Marco Jansen |Guwahati Test | Ravindra Jadeja | Rishabh Pant | Gautam Gambhir | Temba Bavuma |