ஆசியக் கோப்பை இல்லாமல் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி. படம்: https://x.com/BCCI
விளையாட்டு

நவம்பர் 3-க்குள் ஆசியக் கோப்பை வர வேண்டும், இல்லையெனில்...: பிசிசிஐ எச்சரிக்கை | BCCI | Asia Cup T20 |

"ஆசியக் கோப்பையை முடிந்தளவுக்கு விரைவாக பிசிசிஐயிடம் வழங்க வேண்டும் என்று 10 நாள்களுக்கு முன்பு கோரியிருந்தோம். ஆனால்..."

கிழக்கு நியூஸ்

ஆசியக் கோப்பைக்காக மேற்கொண்டு ஒருநாள் காத்திருக்கவுள்ளோம், அதற்குள் கிடைக்கப்பெறாவிட்டால் ஐசிசியிடம் முறையிடவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை டி20 இறுதிச் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த செப்டம்பர் 28 அன்று துபாயில் மோதின. இதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்றது.

இருந்தபோதிலும், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றபோதிலும், இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை. கோப்பை இல்லாமலே கோப்பையைப் பெறுவது போல இந்திய வீரர்கள் கொண்டாடினார்கள்.

இந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை நேருக்கு நேர் மோதின. மூன்று முறையும் இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. இதனால், ஆசியக் கோப்பை முழுக்க பரபரப்பாகவே இருந்தது.

மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மட்டுமில்லாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் அந்நாட்டில் அமைச்சராகவும் இருப்பதால் இந்திய அணி அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது. ஆசியக் கோப்பையை மோசின் நக்வியே எடுத்துச் சென்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. தொடர்ந்து, ஆசியக் கோப்பையை துபாய் அலுவலகத்தில் வைத்து பூட்டி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், தனது அனுமதி இல்லாமல் ஆசியக் கோப்பையை யாரும் தொடக் கூடாது என்றும் யாரிடமும் வழங்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ-க்கு மோசின் நக்வி மின்னஞ்சல் அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. அதில், கோப்பை வேண்டுமெனில் விழா ஒன்றை நடத்துவோம், அந்த விழாவில் கோப்பையைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மோசின் நக்வி குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஆசியக் கோப்பை விவகாரம் குறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

"10 நாள்களுக்கு முன்பு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். ஆசியக் கோப்பையை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக பிசிசிஐயிடம் வழங்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தோம். இருந்தபோதிலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை ஆசியக் கோப்பை வந்து சேரவில்லை. மேற்கொண்டு ஒருநாள் காத்திருக்கவுள்ளோம். நவம்பர் 3-க்குள் கோப்பை கிடைக்கப்பெறாவிட்டால், துபாயிலுள்ள ஐசிசி தலைமையகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. ஐசிசியிடம் எங்களுடைய குறையைத் தெரிவிப்போம். நிச்சயமாக ஐசிசி நீதியைப் பெற்று தந்து, இந்தியா ஆசியக் கோப்பையைப் பெற உதவும் என்று நம்புகிறேன்" என்றார் தேவஜித் சைகியா.

The Board of Control for Cricket in India (BCCI) secretary Devajit Saikia revealed that the board is still waiting for the Asia Cup trophy. He also added that the matter will be raised before the International Cricket Council (ICC) during the meeting on November 4 if the trophy is not handed over to them by Monday.

Asia Cup T20 | BCCI | Asian Cricket Council | ACC | Mohsin Naqvi | Devajit Saikia |