கோப்புப்படம் ANI
விளையாட்டு

ஆசியக் கோப்பையில் இனி இந்தியா பங்கேற்காது?: பிசிசிஐ மறுப்பு

"ஆசியக் கோப்பை அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை."

கிழக்கு நியூஸ்

ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவும் இல்லை, முடிவெடுக்கவும் இல்லை என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா விளக்கமளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரிக்கத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் நேரடியாகத் தாக்குதல் நடத்த, இந்தியாவும் பதிலடியைக் கொடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா இனி பங்கேற்காது என பிசிசிஐ முடிவெடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. காரணம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பவர் மோசின் நக்வி. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மட்டுமின்றி, அந்நாட்டில் அமைச்சராகவும் உள்ளார். இதன் காரணமாக பிசிசிஐ இம்முடிவை எடுத்ததாகச் செய்திகள் வந்தன.

ஆனால், ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ சார்பில் ஆலோசிக்கவும் இல்லை முடிவெடுக்கவும் இல்லை என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது:

"இன்று காலை முதல், ஆசியக் கோப்பை மற்றும் வளர்ந்து வரும் மகளிருக்கான ஆசியக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக வெளியான செய்திகள் எங்களுடைய பார்வைக்கு வந்தன. இரண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படும் போட்டிகள். இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக பிசிசிஐ ஆலோசிக்கவும் இல்லை முடிவெடுக்கவும் இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் எதுவும் தெரிவிக்கவும் இல்லை. தற்போதைய நிலையில் ஐபிஎல் மற்றும் அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (ஆடவர் மற்றும் மகளிர்) தான், எங்களுடைய கவனம் உள்ளது. ஆசியக் கோப்பை அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை" என்று தேவஜித் சைகியா விளக்கமளித்தார்.