ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு! @bcci
விளையாட்டு

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!

டிசம்பர் 1 முதல் பொறுப்பேற்க உள்ளார்.

யோகேஷ் குமார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

ஐசிசியின் தலைவராக உள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் முடிவடைகிறது. ஏற்கெனவே ஒரு முறை ஐசிசியின் தலைவராக பணியாற்றிய அவர் 3-வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்தார்.

இதன் பிறகு ஐசிசியின் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27-க்குள் வேட்புமனுவை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ஐசிசியின் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார். டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும், மிக குறைந்த வயதில் ஐசிசியின் தலைவராக தேர்வாகி ஜெய் ஷா சாதனை படைத்துள்ளார்.