பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ராஃப் மற்றும் சஹிப்ஸதா ஃபர்ஹான் ஆகியோரது களச் செயல்பாடுகள் குறித்து ஐசிசியிடம் பிசிசிஐ புகாரளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை டி20யில் தான் நேரடியாக விளையாடின. ஆசியக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எல்லோரது மனதிலும் இருந்தது. எல்லாவற்றையும் கடந்து செப்டம்பர் 14 அன்று குரூப் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
குரூப் சுற்றில் பாகிஸ்தானை மிக எளிதாக வென்றது இந்தியா. இந்த வெற்றியை இந்திய ராணுவப் படைகளுக்குச் சமர்பிப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துடன் துணை நிற்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த ஆட்டத்துக்கு முன்பு டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைக்குலுக்கிக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்தவுடனும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் சென்றார்கள். இது பிரச்னையாக வெடித்தது. இதற்கு ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் தான் காரணம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது புகாரளித்தது. ஆன்டி பைகிராஃப்ட் தனது வருத்தத்தைத் தெரிவித்த பிறகே, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி மேற்கொண்டு பங்கேற்பது உறுதியானது.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. ஆனால், ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க பேட்டர் சஹிப்ஸதா ஃபர்ஹான் அரை சதம் அடித்து 58 ரன்கள் எடுத்தார். அரை சதம் அடித்தவுடன், துப்பாக்கியால் சுடுவது போன்று கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது பெரும் சர்ச்சையானது.
மேலும், ஃபீல்டிங்கின்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பவுண்டரி எல்லையில் இருந்தார். அப்போது ரசிகர்களை நோக்கிய அவருடைய செய்கையும் விமர்சனத்துக்குள்ளானது. இதுமட்டுமின்றி இந்திய தொடக்க பேட்டர்கள் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆட்டம் நிறைவடைந்தாலும், பிரச்னை நிறைவடையாமலே இருந்தது. இதைத் தொடர்ந்து, வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வியாழனன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் வெற்றி பெற்றால், ஆசியக் கோப்பையில் மூன்றாவது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும்.
இந்நிலையில் தான் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் செய்கைகள் குறித்து ஐசிசியிடம் பிசிசிஐ புகாரளித்துள்ளது. புதன் அன்று இமெயில் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கும் பட்சத்தில், அவர்கள் விசாரணைக்கு நேரடியாக ஆஜராக வேண்டும். ஆட்ட நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் ஆஜராக நேரிடும்.
அதேசமயம், சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரளித்துள்ளது. செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதாகக் கூறியது மற்றும் ராணுவப் படைகளுக்கு வெற்றியைச் சமர்பிப்பதாகக் கூறியது அரசியல் சார்ந்த கருத்துகள் என்று பாகிஸ்தான் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.
Asia Cup T20 | Asia Cup | Asia Cup 2025 | Ind v Pak | India v Pakistan | BCCI | ICC | PCB | Pakistan Cricket Board | Sahibzada Farhan | Haris Rauf | Suryakumar Yadav |