கம்பீர் (இடது) ANI
விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு கெளதம் கம்பீரை அணுகியுள்ள பிசிசிஐ!

கிழக்கு நியூஸ்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் கெளதம் கம்பீரை பிசிசிஐ அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி20 உலகக் கோப்பையுடன் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் விளம்பரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மே 27 தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி. புதிய பயிற்சியாளரின் பதவிக்காலம் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்று ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் வீரரும் கேகேஆர் அணியின் ஆலோசகருமான கெளதம் கம்பீரை பிசிசிஐ அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2024 போட்டியில் கேகேஆர் அணியின் பயணம் முடிவடைந்த பிறகு இரு தரப்பும் மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் 2022, 2023-ல் லக்னெள அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டார். அந்த இரு ஆண்டுகளிலும் லக்னெள அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. இந்த வருடம் அவர் ஆலோசகராக உள்ள கேகேஆர் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.