முஷ்டாக் அஹமது  @Mushy_online
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தின் சுழற்பந்து பயிற்சியாளரானார் முஷ்டாக் அஹமது

யோகேஷ் குமார்

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக முஷ்டாக் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை ஜுன் 1-ல் தொடங்கி ஜுன் 29-ல் முடிவடைகிறது. கரீபியன் தீவுகளில் ஏழு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன.

இந்நிலையில் வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஜூன் மாதத்தில் வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளாக வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்றினார்.

முஷ்டாக் அஹமது 2008 முதல் 2014 வரை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து 2014 - 2016 வரை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும், 2020 - 2022 வரை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

இவர் 1992 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்தார். 144 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 161 விக்கெட்டுகளும், 52 டெஸ்டுகளில் பங்கேற்று 185 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

முஷ்டாக் அஹமது இன்று அணியுடன் இணைவார் என்றும், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் மட்டுமே ,அவர் வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக பணியாற்றுவார் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.