வீரரின் கன்னத்தில் அறைந்த காரணத்துக்காக வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சந்திகா ஹதுருசிங்கா, 26 டெஸ்டுகள் மற்றும் 35 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2-வது முறையாக நியமிக்கப்பட்டார் சந்திகா ஹதுருசிங்கா.
இவரது தலைமையில் வங்கதேச அணி கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த காரணத்துக்காகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட விடுமுறைகளை தாண்டி அதிக விடுமுறைகளை எடுத்தக் காரணத்துக்காகவும் சந்திகா ஹதுருசிங்கா அடுத்த 48 மணிநேரத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த 48 மணிநேரத்திற்கு பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுளது.
இந்நிலையில் வங்கதேச அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக மே.இ. தீவுகளைச் சேர்ந்த ஃபில் சிம்மன்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.