நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்கள்.
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் டி20 அணியிலிருந்து பிரபல பாகிஸ்தான் வீரர்களான பாபர் ஆஸம், ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல நசீம் ஷாவும் அணியில் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ரிஸ்வான், தலைமையேற்ற 5 டி20 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தார்.
இதையடுத்து முழு நேர டி20 கேப்டனாக சல்மான் ஆகா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி இடம்பெற்றுள்ளார். மேலும் அப்துல் சமது, ஹசன் நவாஸ், முஹமது அலி என மூன்று புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். வரும் செப்டம்பரில் ஆசியக் கோப்பையும் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பையும் நடைபெறவுள்ளதால் அதைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் குரூப் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான் அணி. இதையடுத்து இன்று அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஒருநாள் அணியிலிருந்து ஷாஹீன் ஷா அஃப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். எனினும் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடர்களை வெல்ல அஃப்ரிடி முக்கியப் பங்களித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பையில் மோசமாகத் தோற்றாலும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ரிஸ்வான் தக்கவைத்துள்ளார். மேலும் ஒருநாள் அணியில் பாபர் ஆஸமும் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக ஃபகார் ஸமான், சயிம் அயூப் அணியில் இடம்பெறவில்லை.
நியூசி. தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி
டி20
சல்மான் ஆகா (கே)
ஹஸன் நவாஸ்
ஒமைர் யூசுஃப்
முஹமது ஹாரிஸ்
அப்துல் சமத்
இர்ஃபான் நியாஸி
குஷ்தில் ஷா
ஷதாப் கான்
அப்பாஸ் அஃப்ரிடி
ஜஹான்தத் கான்
முஹமது அலி
ஷாஹீன் அஃப்ரிடி
ஹாரிஸ் ராஃப்
சுஃபியான் முகீம்
அப்ரார் அஹமது
உஸ்மான் கான்
ஒருநாள் அணி
முஹமது ரிஸ்வான் (கே)
சல்மான் ஆகா
அப்துல்லா சஃபிக்
அப்ரார் அஹமது
அகிஃப் ஜாவத்
பாபர் ஆஸம்
ஃபஹீம் அஷ்ரஃப்
இமாம் உல் ஹக்
குஷ்தில் ஷா
முஹமது அலி
முஹமது வாசிம் (ஜூ)
இர்ஃபான் நியாஸி
நசீம் ஷா
சுஃபியான் முகீம்
தயாப் தஹிர்