ANI
விளையாட்டு

பாக். அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பாபர் ஆஸம், ரிஸ்வான்

சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு இருவரும் பாக். டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் ஆகியோருக்கு மீண்டும் இடமில்லை.

மே இறுதியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில், 16 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறியது. இதைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. இதற்கான அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட பாகிஸ்தான் பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கியது. ஷஹீன் ஷா அஃப்ரிடி ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மே இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதற்கான அணியிலும் பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் டி20யில் சேர்க்கப்பட்டிருந்த அஃப்ரிடியும் தற்போது டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சல்மான் அகா தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட அணியில் ஷதாப் கான் துணை கேப்டனாக உள்ளார். ஃபகார் ஸமான், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக, ஜனவரிக்குப் பிறகு சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்காத சைம் அயூப் அணிக்குத் திரும்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணி

சல்மான் அகா (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்ரார் அஹமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முஹமது ஹாரிஸ், முஹமது வாசிம், முஹமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சஹிப்ஸாதா ஃபர்ஹான், சைம் அயூப்.