பாபர் ஆஸம் (கோப்புப் படம்) 
விளையாட்டு

குளோபல் டி20: பாபர் ஆஸம், ரிஸ்வான், அஃப்ரிடிக்கு அனுமதி மறுப்பு

நசீம் ஷாவுக்கும் இதே காரணத்துக்காக தி ஹண்ட்ரட் போட்டியில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

கிழக்கு நியூஸ்

கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 போட்டியில் விளையாட ஷஹீன் அஃப்ரிடி, பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

நசீம் ஷா தி ஹண்ட்ரட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"குளோபல் டி20 போட்டியில் விளையாட பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் தடையில்லாச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.

ஆகஸ்ட் 2024 முதல் மார்ச் 2025 வரை பாகிஸ்தான் நிறைய சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையும் அடக்கம். மூன்று வீரர்கள் மற்றும் தேர்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வீரர்களும் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடக் கூடியவர்கள். அடுத்த 8 மாதங்களில் பாகிஸ்தான் 9 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 9 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இவர்களுடைய சேவை என்பது தேவை. முன்னதாக, நசீம் ஷாவுக்கும் இதே காரணத்துக்காக தி ஹண்ட்ரட் போட்டியில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

ஆசிஃப் அலி, இஃப்திகார் அஹமது, முஹமது ஆமிர் மற்றும் முஹமது நவாஸ் ஆகியோருக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் பெரும்பாலும் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் மட்டுமே விளையாடக் கூடியவர்கள்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.